அகில இலங்கைக் கம்பன் கழகம் முன்னெடுக்கும் புதிய முயற்சி
உயர்வோம்’ ஆளுமைத்திறன் பயிற்சி மையம்
‘உயர்வோம்’ எனும் பெயரிலான ‘ஆளுமைத்திறன் பயிற்சி மையம்’ ஒன்றினை எமது கழகம் ஆரம்பிக்கவுள்ளது.
கிளிநொச்சியில் ஒரு ஏக்கர் காணியில், இந்த அமைப்புக்கான தலைமையகத்தை, அமைத்து வருகிறோம்.
இந்த அமைப்பினூடு *அற உணர்வு கொண்ட *இன மத பேதமற்ற *தேசிய உணர்வுமிக்க *இனப்பற்றுள்ள *மும்மொழித்திறனுள்ள
*ஆளுமையும் ஆற்றலும் நிறைந்த *உலகத்தரத்திலான தகுதிகள் கொண்ட *ஓர் இளைய தலைமுறையை உருவாக்குவதே எமது நோக்கம்.
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற இயல்பாளுமை கொண்ட, இளையோர் சிலர் நேர்முகத்தேர்வு மூலம் இப்பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் பயிற்சிக் காலத்தில் ‘உயரவோம்’ நிறுவனத் தலைமையகத்தில் முழுநேரமாகத் தங்கியிருந்து பயிற்சி பெறுவார்கள்.
இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் இப்பயிற்சி நெறி தொடங்கும் காலத்தில் ‘உயர்வோம்’ அமைப்பே இலவசமாக வழங்கும்.
முதலில் இவர்களுக்கு மும்மொழிப்பயிற்சியை, அந்தந்த மொழியில் ஆற்றல் பெற்ற, அவ்வவ் இனைத்தையே சார்ந்த அறிஞர்கள் வழங்குவார்கள்.
இப்பயிற்சிக் காலத்தில் இவர்களுக்கு வீரியமிக்க பல்துறை சார்ந்த ஆளுமையாளர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
பயிற்சிக் காலப்பகுதியில், கலாசாரப் பரிவர்த்தனை மூலம் தென்பகுதிப் பேரினத்துக் குடும்பங்களுடன்
சென்று தங்கிப் பழகும் வாய்ப்பை இவர்களில் சிலர் பெறுவார்கள்.
இக்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் உயர் அரசியல் தலைவர்கள், நிர்வாகத் தலைவர்கள்.
கல்வியாளர்கள், மதத்தலைவர்கள், உலக வர்த்தகர்கள் போன்றோரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.
இப்பயிற்சிக் காலத்தில், நம் மண்ணில் வாழும் பிற இனத்தவரின் கலை, கலாசாரம்,
பண்பாடு, சமயம், உணவுமுறை ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்படும்.
மருத்துவம், விஞ்ஞானம், கலை, சட்டம், முகாமைத்துவம், கணினி போன்ற பல்துறை சார்ந்த விடயங்களிலும்
தேவையான அளவில் இவர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
நம் இனத்தின் உயர்வு நோக்கி அடுத்த ஆண்டு இறுதியளவில் நாம் தொடங்கவிருக்கும் மேற்படி
‘உயர்வோம்’ பயிற்சி நெறி வெற்றி பெற உங்களின் ஆதரவையும் ஆலோசனைகளையும் கைகூப்பி வேண்டி நிற்கிறோம்.